Tuesday, August 25, 2015

கண்டேன் போதையை...


நீண்ட இடைவெளிக்குப்பின்...

எனது மனஉளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும்
வடிகாலில்லாமல்
எதன்மீதும் போதையில்லாமல்
உழன்றுகொண்டிருந்தேன்...

போதை எதற்கென்றா கேட்கின்றீர்?

என்னதான் மனஉளைச்சலும் நிம்மதியின்மையும்
இருந்தாலும்,
மயக்கமோ போதையோ உள்ள
எதனிடத்திலேயும் மனதை செலுத்திவிட்டால்
மனம் லேசாகிவிடும்...

இவ்விசயத்தில் நான் மிகப்பெரிய துரதிருஷ்டசாலி,
எனக்கு மயக்கமோ போதையோ
எதனிடத்திலேயும் இல்லை.
அப்படி நினைத்தே மறுகினேன்...

சமீபத்தில் உணர்ந்தேன் என் போதையை...
அது,
எழுத்து... எழுதுவது...

கண்டேன் போதையை...
எடுத்தேன் கணினியை...
மீட்டேன் என் பிளாக்கை...
ஆரம்பித்தேன் என்கிறுக்கலை...

என்னை பிரதிடுயெக்கப்போகிறேன் இதில்...
இவ்வடிகால் எனக்கு நிம்மதியளிக்கும்
என்ற நம்பிக்கையில்...

என்னால் தொடர்ந்து, இடைவெளி இல்லாமல் எழுதமுடியும் என்று சத்தியமாக என்னாலே நம்ப முடியாது.


ஆனால் தொடர்ந்து முயற்சிப்பேன்... J

Sunday, August 9, 2015

அப்துல் கலாம் அய்யா...

உண்மை
உணர்த்தும் தலைவர் அவர்.
உள்ளம்
உலுக்கும் மனிதம் அவர்.
கனவை
கரைசேர்க்கும்
கட்டுமரம் கிட்டியது அவரால்.
மகா தீபம் ஒன்று
ஓராயிரம் கோடி தீபங்களை ஏற்றியே அணைந்துள்ளது
அக்கோடி தீபங்கள்
பார் முழுவதும்
பரவும் நாள்
பாத தொலைவில்தான் உள்ளது.
மனதும் கண்களும் கரைய எனது நன்றிகள்
அக்கொடியில் ஒன்றாய்....

அய்யா நின்புகழ் நிலைத்திருக்கும்

உலகம் உறையும்வரை.

Saturday, December 17, 2011

வீட்டுமேஜையில் என் ஜாதகம்

இத்தனை நாள் இல்லை
இந்த குழப்பம் கலந்த பயம்...

விரும்பியபடி கிடைக்குமா
என்ற குழப்பத்தை விட...
கிடைக்கப்போவது விரும்பும்படி இருக்குமா
என்ற பயம் பெரிது...

எனது எதிர்பார்ப்புகள்
சொற்பமானவையே...
இவைகள் அற்பமாக்கபட்டுவிடும்போதும்,
கேள்விக்குள்ளாகும்போது,
பாதிப்புக்குள்ளாவது நான்மட்டுமல்ல...
ஆனால் இதற்காக,
பயப்படுவது நான்மட்டுமே...

இத்தனை பயங்களும், குழப்பங்களும் மீறிய
களிப்புடன் கலந்த எதிர்பார்ப்பும்,
வருங்காலத்தை செதுக்கும் கற்பனைகளும்,
புதியதே...
புரிதலுக்கும் அரியதே...

வீட்டுமேஜையில் என் ஜாதகத்தை பார்த்தபிறகு...

Sunday, November 13, 2011

தலைப்பில்லா தருணங்கள் - 1

கல்யாணத்தரகருக்கு கல்யாணம் :
மணப்பெண்ணாக
பலவருடமாய் மாப்பிள்ளை கிடைக்காத பெண்...

பணம் :
அதை நாம் உதாசினப்படுத்தும்போது,
அது நம்மை
வெகுவிரைவில் பழிவாங்கி விடுகிறது...

சொந்தம் :
பல நேரங்களில்
அதன் அளவுகோல் பணமாகவே உள்ளது...


கல்யாணச்சந்தை :
மதிப்பை உயர்த்திக்காட்டும் போட்டி
இரு தரப்பிலும்
பலமாகவே உள்ளது...
இப்போட்டியில் தோற்பது என்னமோ,
இறுதிவரை பார்வையாளராக வேடிக்கை பார்க்கும்
மணமக்களே!!!

Tuesday, October 25, 2011

எனக்கு நானே பிரம்மன்!

எனக்கு நானே பிரம்மன்,
இன்னும் படைத்து கொண்டிருக்கிறேன் என்னை...

நினைத்தேன்,
படைத்ததை முடித்தேன் என்று.
முடித்தேன்,
முடித்ததை மாற்றியே படைத்தேன்.
மாற்றினேன்,
மாற்றங்கள் நன்மையே கொடுக்குமென.
தெளிந்தேன்,
மாற்றங்கள் என்கையில் இல்லை.
உணர்ந்தேன்,
அவை இவ்வுலகத்தின் கோரப்பிடியில்.

எனது நாட்காட்டியின் காகிதங்கள்
என்னால் கிழிக்கபடுவதில்லை.

எனது நாட்கள் பிறரால் பறிக்கப்படுகின்றன,
பிறருக்காக எரிக்கப்படுகின்றன.

அவைகளை எனதாக்க முயற்சிக்கின்றேன்
முயன்று அயன்று பயின்று படைக்கின்றேன்.

இன்னும் படைத்து கொண்டிருக்கிறேன் என்னை...
எனக்கு நானே பிரம்மன் (என நினைத்து!)

தினந்தோறும் என் கண்கள்

தினந்தோறும் என் கண்கள்

உன் இருப்பை சரிபார்க்கும்
உன் உடுப்பின் நிறம் கணிக்கும்
உன் சிரிப்பில் ஒளி இழக்கும்
உன் பார்வையில் நிலை குழையும்
உன் சாலையில் தவம் கிடக்கும்
உன் சோலையில் வர துடிக்கும்
தினந்தோறும் என் கண்கள்

அது சேரும் ஸ்தலம் நீயென அறியாமல்...

Thursday, March 3, 2011

உன் அரைநொடிப்பார்வை

கணநேரம்தான் என்றாலும்
மனம் நின்றே போனது

படபடத்தது மனம்
பட்டாம்பூச்சியின் இறகை போலே

வெற்றிட மௌனமே என்னிடம்

எனைநோக்கிய உன் அரைநொடிப்பார்வைக்கு...